இந்த போராட்டத்திற்கு தமிழக விவசாய சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். இதில் பேசிய தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுந்தரம், கடந்த 60 ஆண்டுகளாக அரசிடம் காவிரி ஆறு, பொன்னியாறு, திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி போராடி வருகிறோம். ஆனால் இதுவரை எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை.
60 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத திட்டம் - விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் - காவிரி நீர்
நாமக்கல்: மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரி நீரை காவிரி ஆறு, பொன்னியாறு, திருமணிமுத்தாறுகளில் இணைத்து ஏரிகளை நிரப்பும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மாணிக்கம்பாளைய பஸ் நிறுத்தம் அருகில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது இந்தத் திட்டத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன்பிறகு சேலம் மாவட்டத்திலுள்ள ஏரிகளை நிரப்பும் வகையில் தற்போதுள்ள முதலமைச்சர் திட்டம் தீட்டி அதனை செயல்படுத்தி வருகிறார். ஆனால் இந்தத் திட்டத்தினை இதுவரை நிறைவேற்றவில்லை. அமைச்சர் தங்கமணி அடுத்த பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். அதனை நாங்கள் வரவேற்கிறோம், சர்க்கரை என்று காகிதத்தில் எழுதியிருந்தால் மட்டும் இனிக்காது, திட்டத்தை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.