திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு: வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் - திருமணிமுத்தாறு வெள்ளப்பெருக்கு
நாமக்கல்: திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நாமக்கல் மாவட்டம் திருமணிமுத்தாற்றின் வழித்தடத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் சிறு தடுப்பணைகள் நிரம்பி, தண்ணீர் பரமத்தி இடும்பன் குளத்தை வந்தடைந்தது.
தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால் இடும்பன் குளம் தற்போது நிரம்பி வழியும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் குளத்தின் கரையோரத்தில் உள்ள பரமத்தி காந்தி நகர் பகுதியில் உள்ள வீடுகளை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் மழை நீடித்தால் 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.