தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில், மாநிலம் முழுவதும் மக்கள் ஆங்காங்கே போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டுவரப்படும் என சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் சிக்கல் குறித்து பேசுகையில் தெரிவித்தார்.
இதற்கு பதிலடியாக, தமிழ்நாட்டின் பிரதான பெரிய கட்சியான திமுகவின் பொருளாளரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன், இங்கேயே (வேலூர் மாவட்டம்) தண்ணீர் சிக்கல் இருக்கிறது. அவ்வாறு தண்ணீர் கொண்டு சென்றால் மாவட்டம் அளவில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இது குறித்து, அமைச்சர் கே.சி. வீரமணி, வேலூர் மக்களின் தேவைக்கு அதிகமான உபரியாக இருக்கக்கூடிய தண்ணீரைத்தான் சென்னைக்கு அனுப்பஇருக்கிறார்கள். அதனால் அம்மாவட்ட மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லே என விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், துரைமுருகனின் பேச்சு பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்துகொண்டு துரைமுருகன் இப்படி பேசலாமா? இப்படி இருக்கும்போது கன்னடக்காரர்களை நாம் காவிரி தண்ணீர் தரவில்லை என்று கூறுகிறோம் என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதையொட்டி, கருத்து தெரிவித்த சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், தமிழ்நாட்டின் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு தண்ணீர் தர மறுத்தால் கர்நாடகம் எப்படி தண்ணீரைத் தர முன்வருமென கேள்வியெழுப்பியுள்ளார்.