இறுக்கமான சூழல் கொண்ட இந்த காலத்தில் மக்கள் தங்களின் மனதினை லேசாக வைத்துக்கொள்ள பூங்காக்கள் போன்றவைகள் அமைக்கப்படுகின்றன. மேலும் அரசு அலுவலகங்களில் அமைந்திருக்கும் பூங்காக்களினால் மக்களுக்கு பாதுகாப்பு இன்னும் அதிகமாகிறது. பராமரிப்பு இல்லாமல் மூடப்பட்ட பல பூங்காக்கள் நாம் அறிந்ததுண்டு. ஆனால் திறந்த நிலையிலும் மக்கள் செல்ல ஐயம் கொள்ளும் ஒரு பூங்கா உண்டென்றால், அது நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பூங்காவாகும்.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறை சார்ந்த மாவட்ட அலுவலகங்கள், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், வட்டாரப் போக்குவரத்துத்துறை அலுவலகம் உட்பட பல அரசு அலுவலகங்கள் உள்ளன. அங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த அலுவலகத்தில் மக்களின் பயன்பாட்டிற்காக ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது, ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தின் இருபுறமும் அரசுப் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த சிறுவர்கள் பூங்காவில் சிறுவர்கள் விளையாட ஏதுவாக ஊஞ்சல்கள், விலங்குகளின் சிலைகள், சறுக்கல்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. அவை மட்டுமின்றி சிறுவர்களின் அறிவை வளர்த்துக் கொள்ள நாமக்கல் மண்ணிற்கு பெருமை சேர்த்த நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளையின் திருவுருவச்சிலை, இராமலிங்கம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறு அடங்கிய தகவல் பலகை, தமிழ்த்தாய் சிலை, நாமக்கல் மாவட்டத்தின் அடையாளமாகத் திகழும் மலைக்கோட்டையின் உருவ மாதிரி ஆகியவையும் முதியவர்கள் மற்றும் பெண்கள் அமர்ந்து, ஓய்வெடுக்க நேர்த்தியாக செய்யப்பட்ட சாய்வு நாற்காலிகளும் உள்ளன.