நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தனிமைப்படுத்தபட்ட வார்டில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரோனா உறுதி செய்யப்பட்ட நாமக்கல், ராசிபுரம், கொக்கரையான் பேட்டை, மோகனூர், பரமத்தி வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்புக்குள்ளானவர்கள் வசித்து வரும் பகுதிகள் தடை செய்யப்பட்டு, ஒரு லட்சத்து 32 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட மஜித் தெரு, பாவடி தெரு, கடைவீதி, பிடில் முத்து தெரு உள்ளிட்ட 7 வீதிகள் முற்றிலும் தடை செய்யப்பட்டு அங்குள்ள பொதுமக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு சிறப்பு ஏற்பாடாக சேந்தமங்கலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு ரத்தப் பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல்லில் சிறப்பு ரத்தப் பரிசோதனை முகாம் இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, “நோய்த் தொற்றுக்கு உள்ளான இப்பகுதியில் வேறு யாருக்கு பாதிப்பு உள்ளதென கண்டறியும் பொருட்டு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இங்கு எடுக்கப்படும் ரத்தம், சளி மற்றும் உமிழ்நீர் மாதிரிகள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான முடிவுகள் நாளை மறுநாள் அறிவிக்கப்பட்டு, அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றனர்.
இதையும் படிங்க:வதந்தி செய்திகளை நம்ப வேண்டாம் -அமைச்சர் தங்கமணி