நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்று வரும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளை சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆய்வு செய்தார்.
அப்போது கட்டுமானப் பணிகளைத் தாமதமின்றி விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சரோஜா, "சத்துணவில் முட்டை வழங்குவது தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படும். அதுகுறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முட்டைகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவித் தொகை வழங்க ஒதுக்கப்பட்ட ரூ.133.75 கோடியில் இதுவரை ரூ.97 கோடி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.