நாமக்கல்லில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்யும் விவிபேட் இயந்திரங்கள் ஆகியவை அரசியல் கட்சியினர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு பலத்த காவல் துறை பாதுகாப்புடன் அனுப்பிவைக்கும் பணிகள் இன்று (மார்ச் 9) தொடங்கின.
இப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மெகராஜ் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டார். இன்றுமுதல் இரு தினங்களுக்கு அவை அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்த இயந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்பட்டு சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , "ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்புக் கிடங்கிலிருந்து, மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளான இராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி-வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய இடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள், காவல் துறை பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்படுகின்றன.