நாமக்கல்: தமிழ்நாட்டில் ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் வி.கே.சசிகலா நேற்று(ஏப். 11) நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் தரிசனம் செய்தார். அதன்பின் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோயிலிலும் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இடைக்கால மனு அளித்ததில் இன்று(ஏப். 11) இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. இதன் முழுமையான விவரங்களை தெரிந்துகொண்டு மேல்முறையீடு செய்வோம்.
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் உருவாக்கிய சட்டதிட்ட விதிகளின்படி கடைக்கோடி தொண்டர்கள்தான், கட்சியின் பொதுச்செயலாளர் யார்? என்பதை தீர்மானம் செய்யமுடியும். ஆனால், நான்கு பேர் சேர்ந்துகொண்டு கட்சியில் இருந்து யாரையும் நீக்கிவிட முடியாது" எனத் தெரிவித்தார்.
திருச்செங்கோட்டில் சாமி தரிசனத்திற்குச் சென்றபோது, சசிகலா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி 'தொடர் தோல்விகளில் இருந்து மீட்டெடுப்பதே எனது கடமை':தற்போது அதிமுகவில் நிலவுகின்ற சூழல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "தற்போது அதிமுக உள்ள நிலைமை அனைவருக்கும் தெரிந்ததே. தொடர் தோல்விகளில் உள்ள அதிமுகவை மீட்டெடுப்பதே எனது கடமை. என்னைப் பொறுத்தவரை அதிமுக நிச்சயமாகவே வருங்காலங்களில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்" எனத் தெரிவித்தார்.
'இதுவும் கடந்து போகும்':பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளதா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கால சூழ்நிலைக்கு தகுந்தவாறு செயல்படமுடியும் எனவும் என்னைப் பொறுத்தவரை, 'இதுவும் கடந்து போகும்' எனத் தெரிவித்தார்.