உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா பரவலைத் தடுக்க மே 3ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மக்களிடம் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே வெளியே வந்து செல்கின்றனர். மேலும், நோய் பரவலைத் தடுக்க மக்கள் அடிக்கடி சோப்பு மூலம் கைகளை சுத்தப்படுத்த வேண்டும், முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் முகக்கவசங்களில் 7 நாட்கள் வரையும், ரூபாய் நோட்டுகள், பிளாஸ்டிக் பொருட்களில் சில நாட்கள் வரையும் கரோனா வைரஸ் உயிர் வாழும். அச்சடிக்கப்பட்ட, காகிதம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றில் கரோனா வைரஸ் 3 மணி நேரத்திற்கு குறைவாகவும் உயிரோடு இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில், பணத்தை வாங்கிய பின் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் நிலை மாறி, ஒரு படி மேலே போய் ரூபாய் நோட்டுக்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து வருகிறார் ஒரு வியாபாரி. பிற மாநிலங்களை போன்று தமிழ்நாட்டிலும் இதுபோன்ற நிகழ்வை காணுகையில் வியப்பை தருவது நிதர்சனம்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள நல்லியாம்பாளையத்தில் உள்ள பாரதி மளிகைக் கடை உரிமையாளர் சேகர் என்பவர் மக்களிடம் சமூக இடைவெளி மற்றும் அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி வருகிறார். கடைக்கு பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே பொருட்களை விற்பனை செய்கிறார்.