நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் (58) மட்டன் ஸ்டால் வைத்துள்ளார். இவரது மனைவி கலைமணி (45) இவர்களுக்கு நவீன் குமார் (26) என்ற மகனும், பிரியதர்ஷினி (23) என்ற மகளும் உள்ளனர். நவீன் குமார் மெரைன் இன்ஜினியரிங் படித்துவிட்டு மும்பையில் உள்ள கதீஜா ஷிப் மேனேஜ்மெண்ட் என்ற நிறுவனத்தில் கிரேடு இன்ஜினியராக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்துவருகிறார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன் சிரியாவுக்கு கச்சா எண்ணை ஏற்றிச்செல்லும் ஒரு கப்பலில் ஷார்ஜாவில் இருந்து பணிக்கு சென்றுள்ளார்.
ஈரான் நாட்டிற்கு பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் இங்கிலாந்து கடல் பகுதியான ஜிப்ரால்டர் பகுதியில் இந்தக் கப்பலை கடந்த 7ஆம் தேதி இங்கிலாந்து அரசு சிறை பிடித்தது.
கப்பலில் சிக்கிக்கொண்ட நவீன் குமாரின் பெற்றோர் இந்நிலையில், நவீன் குமார் சென்ற கப்பல் சிறைபிடிக்கப்பட்டது குறித்து ஜீவானந்தம், கலைமணி தம்பதியனர் கூறுகையில், ”சிறைபிடிக்கப்பட்ட கப்பலில் எங்கள் மகன் நவீன் குமார் பத்திரமாக இருக்கிறார். உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கிறது. தூதரகத்தில் இருந்து வந்து சந்தித்து செல்கிறார்கள் எனவும் அவர் தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார். எனினும் 21 நாட்கள் ஆகிவிட்டதால் எங்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. இதை தாங்கிக்கொள்ளும் மனநிலை எங்களுக்கு இல்லை. எனவே இந்த விஷயத்தில் தலையிட்டு எங்களது மகனை மீட்டுத்தர தமிழ்நாடு முதலமைச்சர், இந்திய பிரதமர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.