நாமக்கல்:நாமக்கல் - திருச்சி பிரதான சாலையில் குப்பம்பாளையம் என்ற இடத்தில் குடிமைப் பொருட்கள் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் இருந்து நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூர், பரமத்தி வேலூர் தாலுகாவில் உள்ள 424 நியாயவிலைக்கடை கடைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில், 25 லாரிகள் மூலம் ரேஷன் பொருட்கள் எடுத்துச்சென்று விநியோகம் செய்யப்படுகிறது.
2023-24ஆம் ஆண்டுக்கான லாரி ஒப்பந்த விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள விரும்பும் லாரி உரிமையாளர்கள் நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டர் பெட்டிகளில் நேற்று (7-2-2023) மாலை 5 மணி முதல் இன்று (8-2-2023) காலை 10.30 மணி வரை டெண்டர் படிவத்தைப் பூர்த்தி செய்து அந்த பெட்டியில் போடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
டெண்டரில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து ஏராளமான லாரி உரிமையாளர்கள் அந்தப் பெட்டியில் தங்களது விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து பெட்டியில் போட வந்திருந்தனர். ஆனால், பெட்டி 10.30 மணியாகியும் பூட்டாமல் இருந்தது. டெண்டருக்கு வந்திருந்தவர்கள் பெட்டியைப் பூட்டுமாறு கூறப்பட்ட பின் 10.30 மணிக்கு மேல் பெட்டி பூட்டப்பட்டது. காலை 11.00-க்குப் பின்னர், டெண்டர் பெட்டி திறக்கப்பட்டு டெண்டர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.