மத்திய அமைச்சரவை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து வெங்காயத்தை நீக்க ஒப்புதல் அளித்துள்ளது விவசாயிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெங்காயம் மட்டுமில்லாது உருளை கிழங்கு, தானியங்கள், பருப்பு வகைகள், உணவு எண்ணெய், விதைகள் உள்ளிட்டவைகளை அத்தியாவசிய பட்டியலில் இருந்து நீக்கி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது.
அரசு தரப்பில் என்ன கூறப்படுகிறது?
இந்த சட்டத்திருத்தத்தால் விவசாயிகள் விளைபொருட்களை அதிகளவில் சேமித்து வைத்து உரிய விலை கிடைக்கும்போது விற்பனை செய்யமுடியும் என அரசு விளக்கமளிக்கிறது. ஆனால் இடைத்தரகர்களின் பதுக்கலுக்கும், விலைவாசி உயர்வுக்குமே இது வழிவகுக்கும் என விவசாயிகள் அரசின் விளக்கத்தை மறுக்கின்றனர்.
நாமக்கல், பெரம்பலூர், பொள்ளாச்சி, தேனி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. மூன்று மாத பயிரான இது செம்மண், களிமண் கொண்ட அனைத்து வகை மண்ணிலும் விளையக் கூடியது. நல்ல வடிகால் வசதியுள்ள வயல்களில் ஏக்கருக்கு 10 டன் வரை மகசூல் பெற முடியும். இந்நிலையில் அரசின் அறிவிப்பால் அனைத்து விவசாயிகளும் கதிகலங்கியுள்ளனர்.
அரசு விளக்கமளித்தும் விவசாயிகள் அஞ்சுவது ஏன்?
முதலாவதாக இந்த அறிவிப்பு விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யும் சூழலை உருவாக்கலாம். அதிகளவில் பதுக்கல் செய்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்க வாய்ப்பாக அமையும். இதனால் விவசாயிகள் அல்ல, பெருமுதலாளிகள்தான் லாபம் ஈட்டமுடியும்.
அத்தியாவசிய பொருள்களின் சட்டத்திருத்தம் விவசாயிகளுக்கு நன்மை பயக்குமா? இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பெருமாள், “ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் மத்திய அரசு சர்க்கரையை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கியது. அதனால் எந்த ஒரு விவசாயியும் பயனடையவில்லை. விவசாயி கரும்புக்கு கூடுதல் விலை கேட்டு போராடிவருகின்றனர். பொதுமக்களும் அதிக விலையில் சர்க்கரையைப் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இதனால் முதலாளிகளுக்குதான் பயன் உருவாகிறது, உழைப்பாளிகளுக்கல்ல. வெங்காயம், உருளைக்கிழங்கு, தானியங்கள் உள்ளிட்ட பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கியது பெருநிறுவனங்களுக்கு சாதகமாக அமையுமே தவிர, எங்களுக்கல்ல” என அழுத்தமாகத் தெரிவித்தார்.
மத்திய அரசின் அறிவிப்பால் விவசாயிகளுக்கு அரசின் சார்பில் மானிய விலையில் விதை, உரம், பூச்சுக்கொல்லி மருந்து உள்ளிட்டவை வழங்குவது நிறுத்தப்படும். இதனால் விதைகளை விவசாயிகள் தனியார் நிறுவனங்களிடம் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
’விவசாயிகள் விளைபொருட்களை அதிகளவில் சேமித்து வைத்து உரிய விலை கிடைக்கும்போது விற்பனை செய்யமுடியும்' என்ற அரசின் விளக்கம் சின்ன வெங்காய விஷயத்தில் தவிடுபொடியாகிறது. எளிதில் அழுகும் தன்மையுடைய வெங்காயத்தை விவசாயிகள் எப்படி அதிகளவில் சேமித்து வைக்கமுடியும் என்ற கேள்வி எழுகிறது.
இது குறித்து புதுச்சத்திரத்தை சேர்ந்த விவசாயி முத்துசாமி, “இந்த சட்டத்தால் விவசாயிகள் அல்ல, பெருமுதலாளிகளும், கள்ளச்சந்தை கும்பலும்தான் அதிக பயனடையும். அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிலே மீண்டும் வெங்காயத்தை அரசு கொண்டுவர வேண்டும். அதுவே விவசாயிகளுக்கு பயனுள்ளதாக அமையும்” என்றார்.
“அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் செய்தது விவசாயிக்கோ, நுகர்வோருக்கோ எந்த பலனையும் அளிக்காது. விவசாயத்தைக் கூட பெருநிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கான தொடக்கமாகத்தான் இது இருக்கும்” என்கிறார் கடந்தப்பட்டி விவசாயி வெங்கடேஷ்.
இதையும் படிங்க: இரட்டிப்பான பிரசவங்கள்... குழந்தைகள் வாசனையால் நிரம்பிய அரியலூர் மருத்துவமனை!