நாமக்கல் பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே 'நாமக்கல் கம்ப்யூட்டர்ஸ்' எனும் லேப்டாப், கம்ப்யூட்டர் கடை இயங்கி வருகிறது. இங்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ரூ.5 லட்சம் திருடு போனது என்று கடையின் உரிமையாளர் ராஜகோபால் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பெயரில் நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் கடையின் முன்புறம் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பர்தா அணிந்த நபர் ஒருவர் கடையின் பூட்டை திறந்து உள்ளே சென்று திருடுவது பதிவாகி இருந்தது. அதனை வைத்து நடத்திய விசாரணையில் அதே கடையில் பணியாற்றிவரும் ஊழியரான உதயசூரியன் பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. எனவே காவல்துறையினர் உதயசூரியனை கைது செய்தனர்.
பர்தா அணிந்து வந்த திருடன் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், சிசிடிவி கேமராவின் உதவியினால் மட்டுமே குற்றவாளியை உடனடியாக கண்டுப்பிடிக்க முடிந்தது. நகரத்தில் பெரும்பாலான கடைகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவின் உதவியினால் குற்றவாளிகளை கைது செய்ய ஏதுவாக உள்ளது, என்றார்.
இந்த சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் ராஜகோபால் கூறுகையில், கடையில் ஐந்து வருடங்களாக உதயசூரியன் வேலை செய்வதால், அவர் மீதான நம்பிக்கையில் ரூ.5 லட்சத்தை பாதுகாப்பாக வைத்திருக்க கொடுத்தேன். ஆனால் அவர் இரவில் பர்தா அணிந்து வந்து பணத்தை கொள்ளையடித்து சென்றது மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது, என்றார்.
கடையில் கண்காணிப்பு கேமரா ஒன்று மட்டும் சாலையை நோக்கி இருந்ததால் குற்றவாளி எந்த திசையில் செல்கிறார் என அறிய முடிந்தது. குற்றச்சம்பவத்தினை புகார் அளித்த அடுத்த 12 மணிநேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்து அவரிடம் உள்ள பணத்தை மீட்டு தந்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு கடை முதலாளி நன்றி தெரிவித்தார். இந்த குற்றச் சம்பவத்திற்கு குற்றவாளியை கண்டறிய உதவியாக இருந்த கண்காணிப்பு கேமராவை இயக்கியவரிடம் கேட்டபோது மேலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் தெரிவித்தார்.
குற்றச்சம்பவம் அதிகாலை 3.30 அளவில் நடந்துள்ளது. அதன்படி பணம் காணாமல் போன கடை மட்டுமில்லாமல் அருகிலுள்ள அனைத்து கடைகளில் உள்ள சாலையை நோக்கி இருந்த 4 கேமராவில் குற்றவாளி சென்றது தெரியவந்தது. அவர் சரியாக அவரது வீட்டின் அருகே சுமார் 100 மீட்டர் தொலைவில் அவர் அணிந்திருந்த பர்தாவை கழற்றினார். அப்போதுதான் குற்றவாளியின் முகம் தெரியவந்தது. எனவே அவரை காவல்துறையினர் விரைவில் கைது செய்தனர். மேலும் அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் கடையின் உட்புறம் எத்தனை கண்காணிப்பு கேமரா வைத்திருந்தாலும் சாலையை நோக்கி ஒரே ஒரு கண்காணிப்பு கேமரா வைத்திருந்தால் மட்டுமே எளிதில் குற்றவாளிகளை கண்டறிய முடியும். எனவே அனைவரும் கண்காணிப்பு கேமராவை சாலையை நோக்கி வைக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார்.