ஆபாத்தான நிலையில் மின்மாற்றி நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டி சாலை ஓரத்தில் மின்சார வாரியத்தால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டது. இந்த மின்மாற்றியானது வருவாய்த் துறைக்குச் சொந்தமான நீரோடை பகுதியில் சிமெண்ட் தொட்டி அமைத்து அதன் மீது மின்மாற்றி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்ததால் நீரோடையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மின்மாற்றி வைத்துள்ள சிமெண்ட் தொட்டி பாரம் தாங்காமல் கீழே இறங்கியது. இந்த சூழலில் குறைவான உயரத்தில் அமைக்கப்பட்ட மின்மாற்றியைச் சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளதால் மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது.
மேலும், தண்ணீர் தேங்கி வருவதால் மின்மாற்றியின் பாரம் தாங்காமல் கீழே விழும் அபாயமும் உள்ளது. எனவே, எவ்வித அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன்னர் மின்மாற்றியை எடுத்து, மாற்று இடத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:விநாயகர் சதுர்த்தி: மணல் சிலை வாங்க மக்களுக்கு ஆர்வம் இல்லை.. சிலை வடிவமைப்பாளர்கள் வேதனை!
பொதுவாக மின்சார வாரியத்தால் மின்மாற்றி ஒன்று வைக்கப்படும்போது பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. மின்மாற்றி வைக்கப்படும் இடம் நீர் தேங்கி இருக்கக் கூடாது, அவ்வாறு தேங்கி இருக்குமானால் கைக்கு எட்டாதவாறு உயரமான மற்றும் தரமான இரண்டு கம்பங்கள் அமைத்து அதன் மீது மின்மாற்றியை அமைக்க வேண்டும்.
ஆனால், பொட்டிரெட்டிப்பட்டி பகுதியில் எவ்வித விதிகளையும் கடைபிடிக்காமல் குழந்தைகள் எளிதில் தொடும் வகையில் உயரம் குறைந்த சிமெண்ட் தொட்டிகள் அமைத்து அதில் மின்மாற்றியை வைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், மின்மாற்றியின் அடியில் தொடர்ந்து நீர் தேங்கி நிற்பதால், மின்மாற்றி வைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தொட்டி பூமியில் புதைந்து வருகிறது.
இதனால் குழந்தைகள் தொட்டு அசம்பாவிதம் ஏதும் நடைபெறுவதற்கு முன்னர் மின்மாற்றியை எடுத்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும், அலட்சியமாக செயல்பட்ட மின்சார வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தத்துவம் ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு அளித்த பேட்டியில், “பொட்டிரெட்டிப்பட்டி பகுதியில் வருவாய்த் துறைக்கு உட்பட்ட இடத்தில் நீரோடையில் மின்மாற்றி அமைந்துள்ளது. மழை காலங்களில் நீரானது தேங்கும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நீர் தேங்கும் பட்சத்தில், தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து உயிர் போகும் அபாயம் உள்ளது. இது தொடர்பாக மின்வாரிய அலுவலகத்தில் கேட்டபோது, இந்த மின் இனைப்பு தனி நபருக்கு செல்கிறது என கூறிகிறார்கள்.
தனி நபர்களுக்குச் செல்லும் வகையில், உயிர் சேதம் ஏதும் எற்பட்டால் பொறுப்பு ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் யார்? அதனால், இந்த நீரோடையில் ஆபத்தான நிலையில் இருக்கக் கூடிய மின்மாற்றியை, விபத்து எற்படும் முன் மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க:வெறும் கையில் தூய்மை பணி.. அதிகாரியின் அலட்சியம்.. சர்ச்சையில் சிக்கிய திருப்பத்தூர் நகராட்சி!