கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்த மூன்று பேர் கைது - நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
நாமக்கல்: பரமத்திவேலூரில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்பனை செய்த மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் பல்வேறு இடங்களில் முறைகேடாக மதுபானங்கள் விற்பனை செய்வதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் அடிப்படையில், பரமத்திவேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜாரணவீரன் தலைமையில், காவலர்கள் பரமத்திவேலூர் 4 ரோடு, பழைய பைபாஸ் ரோடு ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அரசு மதுபானக்கடை அருகே மூன்று பேர் பைகளில் மறைத்து வைத்து மதுபானங்களை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து மதுரை மாவட்டம் மேலூர் பாண்டி (37), ராமச்சந்திரன் (21), திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின் அவர்களிடமிருந்த ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள 121 மது பாட்டில்களை பறிமுதல் செய்து பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் வைத்து காவல் துறையினர் அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.