நாமக்கல்: பொதுவாக ஜல்லிக்கட்டு ஆண்களுக்கான விளையாட்டாகவே பார்க்கப்படுகிறது. காளைகளை அடக்கும் காளையர்களின் வீரத்தையும், அவர்களை ஓட வைக்கும் காளைகளை வளர்க்கும் உரிமையாளர்கள் பெருமைகளைச் சொல்லும் விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. இருப்பினும், ஜல்லிக்கட்டை ஆண்களுக்கான விளையாட்டு என்று மட்டும் சொல்லிட முடியாது.
பெரும்பாலும் கிராமங்களில் காளைகளைப் பராமரிப்பதே பெண்கள்தான். அந்தப் பெண்கள் வளர்க்கும் காளைகள்தான், ஜல்லிக்கட்டில் பங்கேற்கின்றன. ஆனால், இந்த விஷயம் வெளியே தெரியாது. காளைகளை ஜல்லிக்கட்டிற்கு அழைத்து செல்லும் ஆண்களுக்கு, ஒட்டுமொத்த பெருமையெல்லாம் சென்றுவிடுகிறது.
நாமக்கல் அலங்காநத்தம் ஜல்லிக்கட்டு
மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு எவ்வாறு புகழ்பெற்று விளங்குகிறதோ அதே போல் நாமக்கல் மாவட்டத்தில் அலங்காநத்தம் பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளும் சுற்று வட்டாரத்தில் புகழ்பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக 20 ஆண்டுகளுக்கு மேலாக விவசாய பணிகளோடு ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார் கண்ணகி.
இவர், நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம் பகுதியை சேர்ந்தவர். தனது கணவர் சின்னதுரை மற்றும் மகன்களுடன் விவசாயம் செய்து வருகிறார். இத்தோடு தங்களது தோட்டத்தில் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வளர்த்து வரும் இவர் ஜல்லிகட்டு காளைகளையும் வளர்த்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் சிறு வயதாக இருந்ததால் கால்நடைகள் வளர்த்தால் மட்டும் போதும் என்று நினைத்துள்ளார்.
கண்ணகி பேட்டி
இது குறித்து அவர் கூறுகையில், ஜல்லிகட்டு காளைகளை விற்க உறவினர்கள் நிர்பந்தம் செய்த போதும், அதற்கு இடம் கொடுக்காமல்.. ஏன் ஒரு பெண்மணி ஜல்லிகட்டு காளையை வளர்க்க முடியாதா என்ற வைராக்கியத்தோடு விவசாயப் பணிகள் மற்றும் கால்நடை வளர்ப்போடு, ஜல்லிகட்டு காளைகளை கன்றிலிருந்து பக்குவப்படுத்தி அதனை வளர்த்து வருகிறேன்.
தனது மகன்கள் பெரியவர்கள் ஆன நிலையில் உள்ளூரில் நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிகள் மட்டுமல்லாமல் மதுரை, அலங்காநல்லூர், கோவை, குமாரபாளையம், தம்மம்பட்டி, எருமப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிகளில் எனது மாடு கலந்துள்ளது. வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட எனது காளைகள் பல பரிசுகளை வென்று கொடுத்துள்ளது” என்றார்.
ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் பெண் விவசாயி கண்ணகி மேலும், “இதுவரை தனது காளையை யாரும் அடக்கவில்லை எனப் பெருமையோடு கூறும் கண்ணகி, பெற்ற மகனை விட தான் வளர்க்கும் காளையை கண்ணும் கருத்துமாக தானே தொடர்ந்து பராமரித்து வருகிறேன்” என்றும் கூறுகிறார்.
மகனை போல் வளர்கிறார்
இது குறித்து கண்ணகியின் மகன் மணிகண்டன் கூறுகையில், “தன் தாயார் பெற்ற மகனை போல் காளைகளை வளர்த்து வருகிறார். வீட்டில் உள்ளவர்களுக்கு கூட உணவு சமைக்காமல் காளைகளுக்கு உணவு வழங்கி வருகிறார். காளைகளும் தாய் கண்ணகிக்கு மட்டுமே கட்டுப்படும். அவர் உத்தரவுகளுக்கு காளைகள் அனைத்தும் அடிபணியும். பரம்பரை பரம்பரையாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறோம். இம்முறையும் தாயார் தான் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் காளைகளை வாடிவாசலில் அவிழ்த்து விடுவார்” என்றார்.
இதையும் படிங்க: அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் - ஜனவரி 14இல் ஆரம்பமாகிறது வீர விளையாட்டு