நாமக்கல் மாவட்டத்தில், ஜூலை மாதம் ஆரம்பத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 110 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை நேற்றைய (ஜூலை.31) கணக்கின் படி 694 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களாக மாவட்ட நிர்வாகித்தின் அதிரடி நடவடிக்கையால், தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100க்கும் கீழ் இருந்து வந்தது.
ஆனால் இந்த ஒரு மாத காலத்தில் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது மக்களிடையே ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 நாட்களில் 8 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை எல்லையிலேயே தடுத்து தனிமைப்படுத்தி கண்காணிக்கும் வகையில் மாவட்ட எல்லைகளில் 14 இடங்களில் மட்டுமே அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடிகள், தற்போது 54 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இவர்களுடன் சுகாதாரத் துறையினர், வருவாய் துறையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.