தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அயோத்தி ராமர் கோயிலில் ஒலிக்கப் போகும் நாமக்கல் மணிகள்.. 1200 கிலோவில் உருவான 48 மணிகளின் சிறப்பு என்ன?

Namakkal Bells in Ayodhya Ram Temple: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தேவைப்படும் 12 ஆலய மணி மற்றும் 36 பிடி மணிகள் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் மூலம் நாமக்கல்லில் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளன.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 8:05 PM IST

அயோத்தி ராமர் கோயிலுக்கு எடுத்துச் செல்ல நாமக்கல்லில் தயார் செய்யப்பட்ட கோயில் மணிகள்

நாமக்கல்: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கோயில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கானப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்கோயிலுக்கு தேவைப்படும் 12 ஆலய மணி மற்றும் 36 பிடி மணிகள் என மொத்தம் 48 மணிகள் நாமக்கல்லில் கடந்த ஒரு மாத காலமாக தயார் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து அம்மணிகள் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பூஜை செய்யப்பட்டு பெங்களூருக்கு லாரி மூலம் அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்த அனைத்து மணிகளும் அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்பப்பட உள்ளன. புகழ்பெற்ற அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக தினத்தன்று இம்மணிகள் அனைத்தும் அங்கு ஒலிக்க உள்ளன.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்; 1,200 கிலோ எடையுள்ள மணிகள் தயார்:இதுகுறித்து மணி தயாரிப்பில் ஈடுபட்ட நாமக்கல் ஸ்ரீ ஆண்டாள் மோல்டிங் ஒர்க்ஸ் உரிமையாளர் காளிதாஸ் கூறியதாவது, 'கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேந்திர நாயுடு என்பவர் அயோத்தி ராமர் கோயிலுக்கு மணிகளை வழங்க உள்ளார். இதற்கான அனுமதியை அவர் பெற்றுள்ளார். அவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு எங்களை அணுகி மணி தயார் செய்வதற்கான ஆர்டரை வழங்கினார்.

இதன்படி 70 கிலோ எடையில் 5 ஆலய மணிகள், 60 கிலோ எடையில் 6 ஆலய மணிகள் மற்றும் 25 கிலோ எடையில் ஒரு மணி என மொத்தம் 12 மணிகள், 36 பிடி மணிகள் தயாரிப்பதற்காக ஆர்டர் வழங்கினார். மொத்தம் 25 பேர் கடந்த ஒரு மாத காலம் இரவு பகலாக இப்பணியை மேற்கொண்டு முடித்துள்ளோம். மணி தயாரிப்புக்கு காப்பர், வெள்ளி, துத்தநாகம் ஆகிய உலோகங்கள் பயன்டுத்தப்பட்டன. இவற்றை ராஜேந்திர நாயுடு வழங்கினார்.

அயோத்தி ராமர் கோயிலை அலங்கரிக்க மணிகள் புறப்பட்டன: இம்மணிகள் மொத்தம் 1,200 கிலோ எடை கொண்டது. மணி தயாரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுவிட்டது. இதையடுத்து இம்மணிகள் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வைத்து பூஜை செய்து, பெங்களூருக்கு லாரிகள் மூலம் இன்று (டிச.13) அனுப்பப்பட உள்ளன. அங்கு இம்மணிகள் அனைத்தும் வாகனங்களில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்பின், இம்மணிகள் அனைத்தும் அயோத்தி ராமர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். ராமர் கோயிலுக்கு மொத்தம் 108 மணிகள் தேவை. முதல் கட்டமாக, 48 மணிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. இதில் 12 ஆலய மணிகள் கோயில் பிரகாரத்தில் வைக்கப்பட உள்ளது. கோயில் கும்பாபிஷேகத்தன்று இங்கு தயாரிக்கப்பட்ட மணி அங்கு ஒலிக்க உள்ளது. தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும், மலேசியா, சிங்கப்பூர், லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் நாங்கள் கோயில் மணி தயாரித்து அனுப்பியுள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.

ராமர் கோயிலுக்கு மணி தயாரித்ததில் மகிழ்ச்சி:மேலும் பேசிய அவர், 'கடந்த 7 தலைமுறைகளாக மணிகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். நேர்த்தியான முறையில் குறுகிய காலத்தில் மணி தயாரிப்பதற்கான தேவையான தொழில்நுட்பங்களை வைத்துள்ளோம். அயோத்தி ராமர் கோயிலுக்கு தயாரித்த மணியில் இரும்பு பயன்படுத்தவில்லை. ராமரின் வாகனம் ஆஞ்நேயர் சுவாமி. அவரது சன்னதி அமைந்துள்ள நாமக்கல்லில் இருந்து ராமர் கோயிலுக்கு மணிகள் தயாரித்து அனுப்புவது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.

இதையும் படிங்க:மக்களவையில் புகைக்குண்டு வீச்சு..! குதித்தோடிய பார்வையாளர்களால் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details