நாமக்கல்லை தலைமையிடமாக கொண்ட தென்னிந்திய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் மூலம் மொத்தம் 5500 டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களின் சேமிப்புக் கிடங்குகளில் இருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் எரிவாயு எடுத்து செல்லும் பணியினை எல்பிஜி டேங்கர் லாரிகள் செய்து வருகின்றன.
அந்த வகையில் கடந்த ஆண்டு 5,500 டேங்கர் லாரிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில் 4,800 வாகனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்பட்டது. மீதமுள்ள 700 எல்பிஜி டேங்கர் லாரிகள் பணி ஒப்பந்தம் வழங்கக்கோரி ஜூலை 1ஆம் தேதி காலை 6 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்று கடந்த ஜூன் 20ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெற்ற எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று எண்ணைய் நிறுவனங்களின் சார்பில் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஒப்பந்தத்தை மீறி வேலை நிறுத்தத்தில் அறிவித்துள்ளதாகவும் அதற்கு தடை கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றம் அடுத்த வாரம் விசாரிப்பதாக அறிவித்திருந்த நிலையில் இன்று நாமக்கல்லில் தென்னிந்திய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் கார்த்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,"கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வந்த ஒப்பந்த முறையை மாற்றி புதிய விதிமுறைகளை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 2000 லாரிகள் பணி இல்லாமல் இருந்து வருகிறது. 700 வாகனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. ஆகவே மற்ற வாகனங்களுக்கும் ஒப்பந்தம் வழங்க வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் தங்களின் கோரிக்கையை ஏற்கவில்லை.
'எல்பிஜி டேங்கர் லாரிகள் நாளை முதல் ஓடாது' அதன் காரணமாக தற்போது வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளோம். அதன்படி ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 6 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும். எங்களின் வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.15 நாட்களுக்கு எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது. பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை" என்றார்.