தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் கடந்த 6ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 91. அவரது உடல் நேற்று மாலை அவரின் சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையத்தை வந்தடைந்தது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அதிகாலை முதலே ஏராளமான தமிழறிஞர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனுக்கு பத்மஶ்ரீ விருது வழங்கவேண்டும் - ஈஸ்வரன் வலியுறுத்தல் - KAVINGN
நாமக்கல்: உடல்நலக்குறைவு காரணமாக காலமான தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களுக்கு பத்மஶ்ரீ வழங்கவேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுசெயலாளர் ஈஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்து ராமன், அகில உலக தமிழ்ச்சங்க தலைவர் சேதுராமன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர், அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தினர். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் காந்தி செல்வன், மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் சிலம்பொலி செல்லப்பன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் மறைவு தமிழுக்கு ஒரு பேரிழப்பு. அவரது மறைவு எவராலும் ஈடுசெய்யமுடியாது. அவர் தமிழ்த்துறையில் பல்வேறு சாதனைகளை மேற்கொண்டுள்ளார். அவர் எனக்குத் தனிப்பட்ட முறையில் அரசியல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவர் தமிழில் செய்த சாதனையைக் கருத்தில்கொண்டு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ வழங்கியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை அவ்விருது அவருக்கு வழங்கப்படவில்லை. தற்போது அவருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.