நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர், கதிரவன்(52). இவர் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று 2002-ம் ஆண்டு பயிற்சி துணை மாவட்ட ஆட்சியராக தருமபுரி மாவட்டத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றியுள்ளார். கதிரவன் சுனாமியின்போது சிறப்பு துணை மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி பாதிக்கப்பட்டவர்கள் நலத்திட்டங்கள் பெற உதவியுள்ளார்.
இவர் 2007-ம் ஆண்டு மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வுபெற்று, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மாவட்ட வருவாய் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். மேலும் சேலம் மாவட்ட ஆவின் பொதுமேலாளராகவும் இருந்துள்ளார். 2013-ம் ஆண்டு ஐஏஎஸ் அந்தஸ்து பெற்ற இவர் வேளாண்மைத்துறை கூடுதல் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
பின்னர் மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஆட்சியராகப் பதவி ஏற்றார். பின்னர் 2018ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தின் 33-வது மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். இவர் ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியராகப் பணியாற்றியபோது கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.