நாமக்கல்:மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் நேரடியாக கொண்டு செல்லும் வகையில், மக்கள் ஆசி யாத்திரை (ஜன் ஆசிா்வாத் யாத்ரா) இன்று (ஆக.18) நாமக்கல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.
மக்கள் ஆசி யாத்திரை
இதில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் , மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் வி.பி.துரைசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
பிரதமருக்கு நான் கடமைபட்டுள்ளேன்
இதில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசுகையில், "43 மத்திய அமைச்சர்களில் பெரும்பாலானோர் சாதாரண குடும்பத்தில் இருந்தும் பல சமுதாயத்தில் இருந்தும் வந்தவர்கள்.
பிரதமர் மோடி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். 2014ஆம் ஆண்டுக்கு முன் கிராமங்களில் தனி நபர் கழிப்பிடம் என்பது கனவாக இருந்தது. அதேபோல் விறகு அடுப்பில் பெரும்பாலானோர் சமைத்துக் கொண்டிருந்தவர்கள். தற்போது அந்த நிலை மாறி அனைத்து வீடுகளிலும் கழிப்பறை, இலவச சமையல் எரிவாயு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எனது பாட்டன் செருப்பு தைத்து கொண்டிருந்தவர். எனது பெற்றோர் விவசாயம் செய்து கொண்டிருந்தவர்கள். அந்தக் குடும்பத்தில் இருந்து வந்த என்னை மத்திய இணை அமைச்சராக ஆக்கிய பிரதமருக்கு கடமைபட்டுள்ளேன்" என்றார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இந்த மக்கள் ஆசி யாத்திரை நிகழ்ச்சி கோயம்புத்தூரில் தொடங்கியது. அன்றைய நாள் இறுதியில் திருப்பூருக்கு மத்திய இணையமைச்சர் எல். முருகன் வருகை தந்தார். அங்கு சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திராவிட மாயையை உடைப்போம்
அப்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த பாஜக தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். இதன்பிறகு பேசிய அண்ணாமலை, "எல். முருகன் மாநிலத் தலைவராக இருந்தபோது நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு உறுப்பினர்களை வெற்றி பெற வைத்தவர். அந்த நான்கு பேரும் தற்போது திமுகவின் நிதிநிலை அறிக்கையை எதிர்த்துப் பேசி வருகிறார்கள்.
இவ்வளவு வேலைகளை நாம் செய்து மக்களை சந்திக்கும்போது ஏன் 2024 தேர்தலில் 30 எம்.பி.க்களையும், 2026 தேர்தலில் 150 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் நம்மால் பெற முடியாது? நிச்சயம் பெற முடியும். தமிழ்நாட்டில் திராவிடம் என்கிற மாயையை நிச்சயம் உடைத்து காட்டுவோம்" என்றார்.
பிறகு பேசிய எல். முருகன், "தமிழ்நாட்டில் தாமரையே மலராது என்று சொன்னார்கள். ஆனால் தற்போது பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் உள்ளார்கள். அனைத்து தரப்பு சமுதாயத்தினரும் அமைச்சர்களாக வாய்ப்பளித்த பிரதமர் மோடிதான் உண்மையான சமூக நீதி காவலன்" என்றார்.
இதையும் படிங்க:அன்று கலைஞர் தொலைக்காட்சி, இன்று ஸ்டாலின் பேருந்து: சட்டப்பேரவையை அசரவைத்த உதயநிதியின் கன்னிப்பேச்சு!