நாமக்கல் அழகுநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் 2 மாணவர்கள் மட்டுமே படித்தனர். இதனால் அந்தப் பள்ளியை மூடும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, ஆசிரியை மஞ்சுளா ஆகியோர் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரில் சென்று குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
ஆங்கில வழியில் கல்வி கற்று கொடுப்பதாகவும், இதற்கு முன் தான் பணியாற்றி பள்ளியில் மாணவர்கள் ஆங்கிலம் பேசும் வீடியோக்களை பெற்றோர்களிடம் தலைமை ஆசிரியை காட்டி, குழந்தைகளை அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டார்.
தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப்பள்ளி இதனையடுத்து, தலைமை ஆசிரியையின் மீது நம்பிக்கை வைத்து பல பெற்றோர்கள் தனியார் பள்ளியில் படித்து வந்த தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தனர். இதன் காரணமாக கடந்த கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்தது. இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறந்தவுடன் மீண்டும் பெற்றோர்களை சந்தித்து பள்ளியின் சிறப்புகளை ஆசிரியர்கள் விளக்கினார்கள்.
இதனால் மேலும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து தற்போது இந்தப் பள்ளியில் 37 மாணவர்கள், 36 மாணவிகள் என மொத்தம் 73 பேர் பயின்று வருகிறார்கள். 2 மாணவர்கள் மட்டும் படித்து வந்த பள்ளியில் இன்று 73 குழந்தைகள் படிக்கிறார்கள்.
மேலும், இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்தில் கைத்தேர்ந்தவர்களாக உள்ளனர். ஆங்கிலத்தில் பாட புத்தகங்கள் படிப்பதின்றி ஆங்கில நாளிதழ்களையும் சரளமாக வாசித்து காட்டுகின்றனர். அருகில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சவால்விடும் அளவிற்கு இப்பள்ளி அமைந்துள்ளது.
ஆங்கில நாளிதழ் வாசிக்கும் மாணவி