நாமக்கல்: சமூகத்தில் பெண்களின் மாதவிடாய் பற்றிப் பேச மறந்ததன் விளைவாக, இன்று பெண்களின் தயக்கம், தீட்டு எனக்கூறி பெண் ஒருவரைச் சாலையில் அமர வைத்து உணவு அளிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அருகே உள்ள போதகாப்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பெண் யூடியூபர் ஜெகா என்பவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், மாதவிடாயில் தவிக்கும் பெண்கள் வீட்டை விட்டு ஒதுக்கி வைத்து, ஊர் எல்லையில் இருக்கும் ஒரு வீட்டில் தங்க வைக்கப்படுகின்றனர். மேலும் அந்த பெண்களுக்கு உணவுகள் வீட்டிலிருந்து எடுத்து வரப்பட்டு தனித்தட்டு, தண்ணீர் குடிக்கத் தனி குவளை எனக் கொடுத்து சாலையில் அமர வைத்து உணவுகள் அளிக்கப்படுகின்றன. இந்த இழிவான செயலை பெருமை என நினைத்து அப்பெண்களும் ஊர்மக்களின் சம்பிரதாயம் என்று கருதி எதிர்ப்பு தெரிவிக்க மறுப்பு தெரிவிக்கின்றனர்.
இந்த கிராமத்தில் 2007-2008 ம் ஆண்டு பல்நோக்கு திட்டத்தின் கீழ் ரூ.1.25 லட்சம் மதிப்பீட்டில் பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஓய்வு எடுக்கக் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை அப்போதைய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி திறந்து வைத்ததாக அங்குள்ள பதிவேடுகள் குறிப்பிடுகின்றன.