நாமக்கல்:சின்ன முதலைப்பட்டியைச் சேர்ந்த ராம்குமார், சந்தியா திருமண நிகழ்வு நேற்று (ஆகஸ்ட். 20) நடைபெற்றது. இதில் மணமகன் ராம்குமாரின் நண்பர்கள் சிலர், வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டு, மணமக்களை வாழ்த்திப் பேனர் வைத்துள்ளனர்.
அதில், நித்தியானந்தா புகைப்படத்தைப் பெரிதாக வைத்து, அதன் மேல் 'NO சூடு, No சொரணை’ எனவும் 'கைலாசமே துணை' என்றும் எழுதப்பட்டுள்ளது.
நித்யானந்தாவின் வாசகங்கள் தலைப்பில் 'எது எது லவ் மேரேஜா! அது சரி உங்கவாயி உங்க உருட்டு' என ஆரம்பித்து, 'ஒரே வீட்டில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என்றும் பல்வேறு வாசகங்களைப் பதிவு செய்திருந்தனர்.
சுவாரஸ்யமான பேனர்:
மேலும், கவுண்டமணியின் மைண்ட் வாய்ஸாக 'நான் தான் கேட்டுக்குப் பூட்டுப் போட்டேன்' என்றும்; செந்தில் மைண்ட் வாய்ஸாக 'நான் தான் பொண்ணோட ஹார்ட்டுக்கு பூட்டுப் போட்டேன்’ எனவும் நக்கல் தெறிக்க இருக்கும் வசனங்களை இடம்பெற செய்திருந்தனர்.
மணமக்களின் பெயர் இருக்கும் இடத்தில், 'கைதானவர் ராம் குமார் - கைது செய்தவர் சந்தியா' என்றும்; 'குற்றம் - பெண்ணின் மனதைத் திருடி விட்டார், தீர்ப்பு - மூன்று முடிச்சுப் போடுதல், முக்கிய சாட்சிகள் - குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்' எனவும் நகைச்சுவையூட்டும் பதிவுகளுடன் முடித்துவிட்டனர்.
பேனர் வைக்கும் கலாசாரத்தை எதிர்ப்பவர்களும் இந்தப் பேனரை கண்டால் சிரிக்காமல் இருக்க முடியாது என்பதே நிதர்சனம். தற்போது இந்தப் பேனர் சமூக வலைதளங்களில் பரவி, காண்போரை புன்னகையூட்டி வருகிறது.
இதையும் படிங்க: 'நிலவேம்பு சிவா, கோவிட் குமார்'... கல்யாண பேனரில் ரவுசு காட்டிய கரோனா பாய்ஸ்!