நாமக்கல்:நாமக்கல்மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நவம்பர் 10 ஆம் தேதி சாலைப் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார்.
செய்தியாளர்களிடம் அமைச்சர் எ.வ. வேலு கூறுகையில், 'தமிழ்நாட்டில் தொடர்ந்து பருவ மழையால் சேதமடைந்த சாலைகள் முழுவதும் மழைக்குப் பிறகு போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படும்; தரமான சாலைகள் அமைப்பது, விபத்துகள் ஏற்படாமல் தடுப்பது, சுற்றுச்சூழலுக்கு உகந்த மரக்கன்றுகளை நட்டுப் பராமரிப்பது போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
இந்திய அளவில், தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் அதிக அளவில் நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, இனிவரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களைப் பெருமளவில் தடுக்க, மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
சாலை மேம்பாட்டுத் திட்டம்
'இந்நிலையில், குறை சொல்வதற்கு வேறு காரணங்கள் இல்லாததால் எதிர்க்கட்சியினர், அரசின் நடவடிக்கைகளைக் குறை கூறி வருகின்றனர். தமிழ்நாட்டில், சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 250 கி.மீ., சாலைகள் 4 வழிச் சாலையாகவும், 600 கி.மீ., சாலைகள் இரண்டு வழிச் சாலையாகவும் தரம் உயர்த்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பான ஆட்சியைத் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வருகிறார்' என்று தெரிவித்தார்.