தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொடரும் ஜேடர்பாளையம் தீ வைப்பு சம்பவங்கள்.. 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பா? - Namakkal news

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்னை, தொடர்ந்து தீ வைப்பு சம்பவங்களுக்கு வித்திட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடரும் ஜேடர்பாளையம் தீ வைப்பு சம்பவங்கள்.. 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பா?
தொடரும் ஜேடர்பாளையம் தீ வைப்பு சம்பவங்கள்.. 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பா?

By

Published : May 14, 2023, 1:26 PM IST

தொடரும் ஜேடர்பாளையம் தீ வைப்பு சம்பவங்கள்

நாமக்கல்:பரமத்தி வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஜேடர்பாளையத்தில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான ஆலை கொட்டகை உள்ளது. இந்த நிலையில், நேற்று (மே 13) நள்ளிரவில் இந்த கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் ஆலை கொட்டகையில் பணிபுரிந்து வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசை முற்றிலும் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

அதேநேரம், இந்த விபத்தில் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு வடமாநிலத் தொழிலாளர்களில் 2 வடமாநிலத் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும், 2 தொழிலாளர்கள் காயங்கள் உடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து, அந்த பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்களும் சேகரிக்கப்பட்டது.‌ இதனையடுத்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆலை கொட்டகைக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

எனவே, இதற்கு காரணமானவர்களை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரத்தில் அவர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கரப்பாளையத்தில் கடந்த மார்ச் 11ஆம் தேதி பெண் ஒருவர் ஆடு மேய்க்க சென்றபோது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளான்.

இந்த நிலையில் காவல் துறையினர் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவில்லை எனக் கூறி ஒரு சமூகத்தினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இது இரு சமூகத்தினரிடையே மோதலாக வெடித்துள்ளது. இவ்வாறு இரு சமூகத்தினர் இடையே தொடர்ச்சியாக வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை மற்றும் கொட்டகையில் தங்கியிருக்கும் வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கி இருக்கும் குடியிருப்புகள் மற்றும் டிராக்டர்களுக்கு தீ வைப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது.

அதற்கு மாறாக மற்றொரு சமூகத்தினர் சார்ந்த ஆலைக் கொட்டகை மற்றும் அவர்களைச் சார்ந்த பல்வேறு இடங்களில் தீ வைப்பது, பெட்ரோல் குண்டு வீசுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மேலும், சம்பவ இடத்தில் கோவை மண்டல ஐஜி, சேலம் மண்டல டிஐஜி, மாவட்ட எஸ்பி மற்றும் ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் ஜேடர்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:வடமாநில தொழிலாளர்கள் குடிசைகளுக்கு தீ.. நாமக்கல் அருகே பதற்றம்; போலீசார் குவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details