கடந்த சில மாதங்களாக, இந்தியாவில் பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. இதனை சரிசெய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, சிறு, குறு நிறுவனங்களை ஊக்குவிக்க ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை முழுமையாக செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதாவது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு தடை செய்து, அந்த பொருள்களை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்வதாகும். இந்தியாவில் பயன்படுத்தப்படும் டயர்களில் 20 முதல் 30 சதவீதம் டயர்கள் தாய்லாந்து, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் அதிகளவு அந்நியச் செலாவணி வெளிநாடுகளுக்கு செல்கிறது.
இதனை குறைக்கும் நோக்கிலும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக டயர் இறக்குமதிகளுக்கு அதிகளவு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு டயர் தொழிலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், அதே சமயம் விலை உயர்வையும் அரசு கட்டுபடுத்த வேண்டும் எனவும் வாகன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து டயர் விற்பனையாளர் பரமன் கூறுகையில், “வெளிநாடுகளில் இருந்து டயர் இறக்குமதிக்கு தடை விதிக்கும் முடிவு வரவேற்புக்குரியது. இதன் மூலம் உள்நாட்டில் டயர் உற்பத்தி அதிகரித்து பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைப்பதோடு, உள்நாட்டிலே சர்வதேச தரத்திலான டயர்களை அதிகளவு உற்பத்தி செய்ய முடியும்” என்றார்.
இது குறித்து டயர் ரீடிரேடிங் செய்து வரும் ரவிச்சந்திரன் கூறுகையில், “வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டயர்கள் விலை மலிவாக இருந்தாலும், அதன் தரம் குறைந்தே காணப்படுகிறது. விலை குறைவை நம்பி வெளிநாட்டு டயர்களை வாங்கிய பலருக்கு இழப்பே அதிகளவு ஏற்பட்டுள்ளது.