நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நடந்து வந்த குழந்தை விற்பனை சம்பவம், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு செவிலியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற அமுதா, குழந்தை விற்பனையை பல ஆண்டுகளாக செய்து வந்துள்ளார். ஆண் குழந்தை ரூ.4 லட்சம் வரையும், பெண் குழந்தை ரூ.3 லட்சம் வரையும் விற்றிருக்கிறார். இந்த விவகாரம் தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக செவிலியர் அமுதா உடன் அவரது கணவர் ரவிச்சந்திரன், தனியார் மருத்துவமனை செவிலியர் பர்வீன், கொல்லிமலை வாழவந்திநாடு அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிகிறது.
குழந்தை விற்பனை வழக்கில் நேற்று நாமக்கல்லில் அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பிறப்பு சான்றிதழை சரிப்பார்க்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கொல்லிமலையில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறப்பு சான்றிதழ் சரிபார்க்கும்போது, 20 குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் மட்டும் உள்ளது. 20 குழந்தைகள் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து கைதான கொல்லிமலையை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், முருகேசன்தான் இரண்டு குழந்தைகளை கொல்லிமலையில் வாங்கி தனியார் மருத்துவமனை செவிலியர் பர்வீனிடம் விற்பனை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் இருபது குழந்தைகள் மாயமானது குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி வருவதாக காவல்துறையினர் வட்டாரத்தில் கூறப்படுகிறது.