தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Chandrayaan-3 : நிலவில் தடம் பதிக்கும் முன் நாமக்கல் மண்ணில் தடம் பதித்த சந்திராயன்-3

சந்திரயான் 3 விண்கலத்தில் பயணிக்கும் லேண்டர், ரோவர் ஆகிய உபகரணங்கள் நிலவில் இறங்குவதற்கு முன்பாக நாமக்கல்லில் உள்ள குன்னமலை கிராமத்தில் தோண்டி எடுக்கப்பட்ட அனார்தசைட் மண் மாதிரியில் இயக்கி, இஸ்ரோ சோதித்துப் பார்த்து வெற்றி கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 5:55 PM IST

நாமக்கல்:விண்வெளித் துறையில் வல்லரசு நாடுகளுக்கு இணையாகப் போட்டி போடும் இஸ்ரோ, கடந்த 2008 அக்டோபர் 22ஆம் தேதி சந்திரயான் 1 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. இந்த சந்திரயான் 1 விண்கலம் நிலவின் வட துருவத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டு, நிலவின் பரப்பில் பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவை மேலும் ஆய்வு செய்யும் வகையில் சந்திரயான் 2 திட்டத்தை 603 கோடி ரூபாய் மதிப்பில் இஸ்ரோ முன்னெடுத்தது. அதன்படி, நிலவின் மேற்பரப்பையும், தென்துருவ முனையையும் ஆய்வு செய்யும் வகையில் விண்கலம் உருவாக்கப்பட்டு சந்திரயான் 2 விண்கலம் ஜிஎஸ்எல்வி எம்கே 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திராயன் 2-ல் உள்ள விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் இந்த திட்டம் தோல்வி அடைந்தது.

முன்னதாக சந்திரயான் 2 விண்கலத்தில் உள்ள லேண்டர், ரோவர் ஆகியவை சரியாக தரையிறங்குகிறதா என்பதை ஆய்வு செய்ய நிலவில் உள்ள மண் தேவைப்பட்டது. அந்த மண் அமெரிக்காவின் நாசாவிடம் இருந்து ஒரு கிலோ இந்திய மதிப்பில் 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய சூழல் இருந்தது. அதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்தியாவில் அந்த வகை மண் உள்ளதா என்பதை ஆய்வு செய்தபோது அந்த வகை மண் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் அடுத்துள்ள குன்னமலை மற்றும் சித்தம்பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் கிடைப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள புவியியல் துறை பேராசிரியர்கள் துணையுடன் சித்தம்பூண்டி மற்றும் குன்னமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தனர். அந்த மண்ணில் நிலவில் உள்ள மண் போல அனார்தசைட் என்ற வேதித் தன்மை கொண்டிருந்தது தெரியவந்தது. அதனையடுத்து மண் மற்றும் பாறைகள் என சுமார் 50 டன் அளவுக்கு பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மண் மாதிரிகளைக் கொண்டு சிறப்பு ஆய்வகம் உருவாக்கப்பட்டு, சந்திரயான் 2 ஆர்பிட்டர் நிலவின் பரப்பில் பத்திரமாக இறக்குவதையும், லேண்டர், ரோவர் ஆகியவற்றை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக இயக்கி சோதித்துப் பார்த்தனர்.

அதன்படி கடந்த 14ஆம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திராயன் 3ல் உள்ள லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை பத்திரமாக தரையிறங்குகிறதா என்பதை இஸ்ரோவிடம் உள்ள நாமக்கல் மண்ணை வைத்து பல கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் வெற்றி கண்டவுடன் கடந்த 14ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம் 3 எம் 4 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று (ஆக.23) மாலை 6‌ மணி 4 நிமிடங்களில் விக்ரம் மற்றும் லேண்டர் நிலவில் தரையிறங்க உள்ளது.

பொதுவாக மண் என்பது இளம் சிவப்பு அல்லது கருஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். ஆனால் சித்தம்பூண்டி மற்றும் குன்னமலை பகுதியில் உள்ள மண் என்பது வெண்மை நிறத்தில் காணப்படும். எனவே இந்த மண்ணை வைத்து சந்திராயன் 2 மற்றும் சந்திரயான் 3 பரிசோதனை செய்தது நாமக்கல் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:"சந்திரயான்-3 திட்டமிட்டபடி தரையிறங்கும்.. ஒத்திவைப்புக்கு வாய்ப்பில்லை" - இஸ்ரோ தலைவர் உறுதி!

ABOUT THE AUTHOR

...view details