நாமக்கல் மெட்டாலா அடுத்துள்ள கார்கூடல்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் யோகலிங்கம் என்பவர் கடந்த இருதினங்களுக்கு முன்பு திருவிழாவில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
சாதி பெயர் கூறி சிறுவன் மீது தாக்குதல்: எஸ்.பி.யிடம் தந்தை புகார்! - நாமக்கல்
நாமக்கல்: சாதி பெயரை கூறி அடித்து உதைத்து துன்புறுத்தியவர்கள் மீது நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.
அப்போது, அங்குவந்து மாற்று சமூகத்தினர் யோகலிங்கத்தைப் பிடித்து சாதிப்பெயர் குறிப்பிட்டு, தகாத வார்த்தைகளைக் கூறி திட்டியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அங்கு திரண்ட மாற்றுச்சமூகத்தினர் யோகலிங்கத்தை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த யோகலிங்கத்தை மீட்ட கிராம மக்கள் ராசிபுரம் அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, மெட்டாலா காவல்நிலையத்தில் புகார் அளித்தார் ரங்கசாமி. அதனடிப்படையில், மெட்டாலா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த ரங்கசாமி மற்றும் கிராம மக்கள் மெட்டாலா காவல்நிலைய போலீசார் இச்சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்தவில்லை எனவும், போலீசார் ஒரு தரப்பிற்கு மட்டுமே சாதகமாக செயல்படுவதாகவும் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை அளித்தனர். மேலும் தனது மகனை சாதி பெயரை கூறி அடித்து துன்புறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.