நாமக்கல்: மோகனூர் அடுத்த ஆரியூரில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் ஏ.சி.மணி. இவர் மாவட்ட அதிமுக ஒன்றிய அவைத்தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வசித்துவரும் அவரது சகோதரர் சுப்ரமணியம் என்பவரது பெயரில் கடந்த 2020 ஆம் ஆண்டு ரூ.1.2 லட்சம் கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 2021ஆம் மீண்டும் தனது சகோதரர் பெயரில் போலி கணக்கு தொடர்ந்து ரூ.1.6 லட்சம் வட்டியில்லா பயிர் கடன் பெற்றுள்ளார்.
திமுக ஆட்சி அமைந்ததும் அந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட மற்றும் மாநில கூட்டுறவு சங்க பதிவாளருக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக கூட்டுறவு துறை அலுவலர்கள் தலைமையில் ஆரியூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையிலான முதற்கட்ட விசாரணையில் கூட்டுறவு சங்க தலைவர் ஏ.சி.மணி மோசடி செய்ததற்கு முகாந்திரம் இருப்பதாக கூட்டுறவு சங்க அலுவலர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர்.