கரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஏப்ரல் 14ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது. ஊரடங்கு உத்தரவு முடியும் தருவாயில் உள்ள நிலையில், மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வந்துச் செல்கின்றனர். இருப்பினும், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் போதிய வருமானமின்றி பசி வறுமையில் வாடி வருகின்றனர்.
அன்றாட வேலையை நம்பி வாழ்ந்து வரும் மக்கள், அடுத்த வேளை உணவிற்கே என்ன செய்வது என்பது தெரியாமல் விழிபிதுங்கி நிற்கதியாய் நிற்கின்னறனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளும் அதனை நம்பி ஏராளமான தொழிலாளிகளும் உள்ளனர். தமிழ்நாடு அரசின் ஊரடங்கால் விசைத்தறிகள் செயல்படாமல் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட உணவுக்கு கூட போதிய வருமானமின்றி தவித்து வருகின்றனர்.
அவர்களுக்கு குமாரபாளையத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து தனியார் திருமண மண்டபத்தில் தினசரி மூன்று வேளையும் உணவளித்து வருகின்றனர். ஏழை, எளியோர், முதியவர், வெளிமாநிலத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என மூவாயிரம் பேருக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தினசரி உணவு வழங்கும் மனிதம் போற்றும் பணியை செய்து வருகின்றனர்.