நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருச்சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு 94 பயனாளிகளுக்கு இருச்சக்கர வாகனம் வழங்கும் ஆணையும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ 14 லட்சம் கடனுதவிகளை வழங்கினர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, "தமிழ்நாட்டில் அனைத்து துறைகளில் சேதமதிப்பு கணக்கிடப்பட்டு நிவர் புயல் நிவாரணமாக முதற்கட்டமாக 3,700 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது.
நேற்று வந்துள்ள மத்திய குழுவினர் புயல் சேதங்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, முதலமைச்சர் முழுசேதம் குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கவுள்ளார்.
புரெவி புயலால் கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 90 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மட்டுமே தற்போது மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் நாளை ஆய்வு செய்து நீர் வடிந்த பிறகு மின் இணைப்பு வழங்கப்படும். பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் சாய ஆலைகளுக்கு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான அனுமதி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. விரைவில் அந்த அனுமதி கிடைத்தவுடன் பொது சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படும்" எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மின் துறைக்கு ரூ.64 கோடி இழப்பு!