நாமக்கல் அருகே உள்ள கருப்பட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரவிச்சந்திரனுக்கு, அதேபகுதியில் மூன்று ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தின் ஒரு பகுதியில், வரப்பு அமைப்பதற்காக நேற்று (ஆகஸ்ட் 27) பொக்லைன் இயந்திரம் மூலம் ரவிச்சந்திரன் நிலத்தை தோண்டியுள்ளார்.
அப்போது, ஒரு குறிப்பிட்ட பகுதியில் புதைகுழி போல தென்பட்டது. அப்பகுதியில் மட்டும் ஏழு அடி ஆழத்தில் பள்ளம் தோண்டியதில், பழங்கால தானியக்கிடங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே அங்கு புதையல் இருப்பதாக தகவல் பரவியதையடுத்து ரவிச்சந்திரன் நிலத்தை பார்க்க பொதுமக்கள் பலரும் கூடினர். ஆனால், அங்கு புதையல் எதுவும் இல்லை.
நாமக்கல் அருகே விவசாய நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால தானியகிடங்கி இது குறித்து விவசாயி ரவிச்சந்திரன் கூறுகையில், "இந்த நிலம் எங்கள் குடும்பத்திடம் 150 ஆண்டுக்கு மேலாக இருக்கிறது. இதற்கு முன் பலமுறை இந்த இடத்தில் உழவு ஓட்டியுள்ளோம். அப்போதெல்லாம் தானிய கிடங்கு இருந்தது குறித்த அறிகுறியே தெரியவில்லை.
தற்போது வரப்பு அமைப்பதற்காக சற்று ஆழமாக தோண்டியதால் 5 அடி விட்ட அளவில் வட்ட வடிவிலான தானிய கிடங்கு தென்பட்டுள்ளது. பழங்காலத்தில் தற்போது போல வசதியான வீடுகள், தனி அறைகள் கிடையாது. எங்கள் மூதாதையர்கள் குடிசை வீடுகளில் தான் வசித்துள்ளனர். அப்போது விவசாயத்தின் மூலம் கிடைக்கும் தானியங்களை சேமித்து வைக்க, தானிய கிடங்கை ஏற்படுத்தியுள்ளனர். தானிய கிடங்கு அமைந்துள்ள இடத்தை தொடர்ந்து பராமரிக்க உள்ளேன்" என்றார்.
இதையும் படிங்க:கொந்தகையில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு