மயிலாடுதுறை: காவிரியாற்றின் கிளை ஆறுகளில் ஒன்றான வீரசோழன் ஆறு, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி கடலில் கலக்கிறது. இந்த வீரசோழன் ஆற்றில் சங்கரன்பந்தல் என்ற இடத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புகளின் ’கழிவு நீர்’ முழுவதுமாக திறந்துவிடப்படுகிறது. இதனால், வற்றாத ஜீவநதிபோல் ’சாக்கடை நீர்’ நிரம்பி ஆறு போல ஓடிக் கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக, கொசுக்கள் உற்பத்தியாகி பலவித நோய்களும் ஏற்படுகின்றன. மேலும், நிலத்தடி நீரும் மெதுவாக, சாக்கடை நீராக மாறி வருகிறது. அதேநேரம், தற்போது மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஓரிரு வாரங்களில் வீரசோழன் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, உடனடியாக குடியிருப்புகளின் கழிவுநீர், ஆற்றில் கலந்து வருவதைத் தடுக்க பொதுப்பணித்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆற்றை சுத்தப்படுத்த வேண்டும் எனவும்; இலுப்பூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த கதிரவன் என்ற இளைஞர் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனால், இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று (மே 26) காலை 8 மணி முதல் சாக்கடை நீருக்கு அருகில் இருக்கும் ஆற்றின் உள்பகுதியில், கதிரவன் தலைகீழாக சிரசாசனம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டார்.