கரோனா அச்சம் காரணமாக தமிழ்நாட்டின் பிரபல வழிப்பாட்டுத் தலங்கள் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன.
அந்த வகையில், நாகை மாவட்டம், நாகூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவும் கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று (ஆக. 30) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி வழங்கி, உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து, நாகூர் தர்காவை திறப்பதற்கான ஆயத்தப் பணிகளில் தர்கா நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
ஐந்து மாதங்களாக தர்கா பூட்டப்பட்டு இருந்த நிலையில், அலங்கார வாசல், முன்பகுதி, கால்மாட்டு வாசல், கிழக்கு வாசல் உள்ளிட்ட பகுதிகளிலும், பக்தர்கள் அமரும் இடம் உள்ளிட்ட தர்காவின் அனைத்துப் பகுதிகளிலும் தற்போது தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கிருமி நாசினிக் கருவி அமைக்கும் பணிகளும் தொடங்கி உள்ளன.