தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கலந்து மீன்வளத்தை பாதிக்கின்றது - சௌமியா சுவாமிநாதன்! - Fisherwomen Awareness

M.S.Swaminathan Research Foundation: எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் 14 ஆம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய அதன் தலைவர் சௌமியா சுவாமிநாதன், பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்கவும், கடலின் வளத்தை பாதிப்படைய செய்யும் பிளாஸ்டிக் பொருட்களை முறையாக அகற்றவும் வேண்டும் என அறிவுறுத்தினார்.

Soumya Swaminathan is the Chairman of MS Swaminathan Research Institute
பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் கலந்து மீன்வளத்தை பாதிக்கின்றது

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 9:58 AM IST

Updated : Jan 6, 2024, 10:12 AM IST

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சௌமியா சுவாமிநாதன் பேட்டி

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த பூம்புகார் மீனவர் கிராமத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி (M.S.Swaminathan Research Foundation) நிறுவனத்தின் 14 ஆம் ஆண்டு துவக்க விழா நேற்று (ஜன.5) நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சௌமியா சுவாமிநாதன் மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா சுவாமிநாதன், 'சுனாமிக்குப் பிறகு கடலோர பகுதியில், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம். மீனவர்களுக்காக செல்போனில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு கடந்த 12 ஆண்டுகளில் பல்வேறு தரவுகள் மேம்படுத்தப்பட்டு அதன் மூலம் மீனவர்கள் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.

மீனவப் பெண்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் விதமாக, சோலார் மீன் உலர்த்தும் கலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மீனவப் பெண்கள் எளிமையான முறையில் மீன்களை உலர்த்தி மதிப்புக் கூட்டுப் பொருளாக சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத நிலையில் விற்பனை செய்ய முடியும்.

அதேபோல், மீனவப் பெண்களுக்கு WomenConnect Challenge என்ற திட்டத்தின் கீழ் 6000 பெண்களுக்கு, டேப் (Tab) மூலம் பெண்களுக்கு தேவையான தகவல்களை எடுக்கலாம் என்பது பற்றிய பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இதன் திட்டம் மூலம் முதலில் 1500 பெண்களுக்கு இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.

அதேபோல், மீனவப் பெண்களுக்கு எனத் தனி உதவி மையம் அறிவிக்கப்பட்டு, அதற்கான எண்களும் வழங்கப்பட்டுள்ளன. மீன் விற்பனை மற்றும் மதிப்புக் கூட்டுப் பொருள்கள் குறித்து சந்தேகம் இருந்தால் 9080068830, 9363948808 என்ற எண்களைத் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

தற்போதைய சூழலில் பருவநிலை மாற்றம் மற்றும் கடல் மாசுபாடு காரணமாக, கடலில் மீன்வளம் குறைந்து வருகிறது. குறிப்பாக, பாலீத்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் அதிகரித்ததால் பயன்பாடு அற்ற இந்த பொருட்கள் அதிகமாகக் கடலில் சேர்ந்து மீன்வளம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

அதேநேரம், அந்த மீன்களை உண்பதால் சுற்றியுள்ள அனைவருக்கும் அதன் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடுகளை, பொதுமக்கள் பெருமளவு குறைக்க வேண்டும். பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மிகக் கவனமுடன் அப்புறப்படுத்த வேண்டும்.

மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் பொழுது, அதில் ஒதுங்கும் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் கவர்களை சேகரித்து அப்புறப்படுத்தவும் அவற்றை மறு சுழற்சி முறையில் பயன்படுத்துவதற்கான திட்டத்தையும் செயல்படுத்த உள்ளோம். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் விதமாக, கடலோரப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்தப்படும்” எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ரூ.1-க்கு 29 பைசா மட்டுமே.. மத்திய அரசை கடுமையாக சாடிய அமைச்சர் தங்கம் தென்னரசு!

Last Updated : Jan 6, 2024, 10:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details