நாகப்பட்டினம்: கீழ்வேளூர் ஒன்றியம் புதுச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர், தனது மனைவி, மூன்று மகள்களுடன் வசித்துவந்தார். இந்நிலையில், இவரது மூத்த மகள் தனலட்சுமி, அப்பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் என்ற இளைஞரை காதலித்து வந்த நிலையில் அவர்கள் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களது காதலை முதலில் எதிர்த்த தனலட்சுமியின் குடும்பத்தார், பின்னர் அவர்களை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து தனலட்சுமி தனது குடும்பத்தாருடன் செல்போனில் பேசிவந்துள்ளார். இந்நிலையில், இன்று (பிப்ரவரி 18) தனலட்சுமியின் குடும்பத்தார் அனைவரும் இறந்துகிடப்பதாக விமல்ராஜின் சகோதரர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், இறந்தவர்களின் உடல்களை மீட்கச் சென்றனர். அப்போது, தனலட்சுமியின் தந்தை தூக்கிட்டவாரும், அவரது மனைவி, மகள்கள் ரத்தக் காயங்களுடனும் இறந்து கிடந்ததைக் கண்டுள்ளனர்.
பின்னர், அவர்களது உடல்களை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.