உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்த வைரஸ் பெருந்தொற்றால் 6 ஆயிரத்து 9 பேர் பாதிக்கப்பட்டும், 40 பேர் உயிரிழந்தும் உள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. பள்ளி-கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், பொழுதுபோக்கு மையங்கள், அரசு அலுவலங்கள் என அனைத்தும் தொடர்ந்து மூடிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் பொது இடங்களில் கூடவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளில் காவல் துறை, சுகாதாரத் துறை, வருவாய் துறை, பள்ளிக் கல்வித் துறை என அனைத்துத் துறைகளும் ஈடுபட்டுவருகின்றன. இதில் தன்னார்வலர்களும் இணைந்து தம்மாலான பணிகளை முன்னெடுத்துவருகின்றனர்.
வீடு வீடாகச் சென்று மருத்துவம் பார்த்து வரும் பெண் மருத்துவர் பிரியதர்ஷினி இதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பிரியதர்ஷினி, தனது மருத்துவமனைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள முதியவர்கள், காசநோயாளி, நீரிழிவு, ரத்தக்கொதிப்பு உள்ளவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களுக்கு சளி, இருமல், மூச்சு திணறல் உள்ளதா என்றும், மேலும் சில பரிசோதனைகளை செய்து அவர்களுக்கு தேவையான மருந்துவ அறிவுரைகளை கூறி தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகிறார்.
அதுமட்டுமின்றி கீழ்வேளூரில் செயல்பட்டுவரும் அவ்வை முதியோர் இல்லத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவத் தேவைகளையும் தினந்தோறும் செய்துவருகிறார். அரசு மருத்துவர் பிரியதர்ஷினியின் இந்தப் பணியை பலரும் மனதார பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க :கோவிட்-19 விழிப்புணர்வு: அரசுடன் கை கோர்த்த நாட்டுப்புற இசைக் கலைஞர்கள்!