தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி நாள்தோறும் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு என அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஏப்ரல் 25) முழு ஊரடங்கால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
மயிலாடுதுறை பேருந்து நிலையம் காமராஜர் சாலை, பெரியகடைவீதி, வண்டிக்காரத்தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில்முழு ஊரடங்கு பின்பற்றப்படுகிறதா, ஊரடங்கை மீறி கிராமங்களில் கடைகள் திறந்துள்ளனவா என்று நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பிச்சைமுத்து ராமையன் தலைமையில் அலுவலர்கள், ஊழியர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருவாரூர் சாலைப் பகுதியில் இறைச்சிக் கடை நடத்திவந்த ஒருவர் சாக்கில் மறைத்துவைத்து மட்டன் சிக்கன் வியாபாரம் செய்தார். இதனைக் கண்ட அலுவலர்கள் அவரைப் பிடித்து ரூ.5,000 அபராதம் விதித்ததோடு, அவரிடமிருந்து இறைச்சிகளைப் பறிமுதல்செய்து, எச்சரிக்கைவிடுத்து அனுப்பினர்.
மேலும் மதுரா நகரில் இறைச்சி வியாபாரத்தில் ஈடுபட்ட கடையை மூடச் செய்து எச்சரிக்கைவிடுத்தனர்.