மயிலாடுதுறையில் இந்தி மொழியில் விலை பட்டியல் மயிலாடுதுறை: தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வட மாநிலத் தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் இருந்து வருகின்றனர். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்திலும் வடமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் ஜெயின் சமூகத்தினர் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர்.
மேலும் மயிலாடுதுறையில் பட்டமங்கலத்தெரு, மகாதானத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஜெயின் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடைகளில் பொருட்களின் விலை மற்றும் பெயர் குறித்து வடமாநிலத்தவர்கள் எளிதில் புரிந்து கொண்டு காய்கறி வாங்கும் வகையில், மயிலாடுதுறை மகாதான தெருவில் உள்ள ராஜசேகர் என்பவர், அவரது காய்கறி கடையில் காய்கறிகளின் விலைப்பட்டியலில் தமிழ் மொழியுடன் சேர்த்து, இந்தி மொழியிலும் தனித்தனியாக ஸ்லேட்டில் எழுதி வைத்துள்ளார்.
கடை உரிமையாளரின் இந்த செயல் பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும், வடமாநிலத்தவரிடம் வரவேற்பையும் பெற்றுள்ளது. கடையில் விற்பனையாகும் அன்றைய காய்கறிகளின் விவரம் மற்றும் அதன் விலை உள்ளிட்டவை, தனித்தனி ஸ்லேட்டில் எழுதி கடையின் முன்பு தொங்க விடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் அதிக அளவிலான வடமாநிலத் தொழிலாளர்கள் உள்ளதால் காய்கறிகளின் விலைகளை, அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விலைப்பட்டியல் வைக்க வேண்டுகோள் விடுத்ததன் பெயரில் தற்போது விலை பட்டியல் பலகை இந்தியில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் ஆர்வமுடன் காய்கறிகளை வாங்கிச் செல்வதாகவும் ராஜசேகர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:பொங்கல் தொகுப்பில் சர்க்கரைக்குப் பதிலாக நாட்டு வெல்லம் தர வேண்டும் - தஞ்சை விவசாயிகள் கோரிக்கை!