தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 19, 2020, 6:41 PM IST

ETV Bharat / state

’வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெறும்’ - பேராலய அதிபர் அறிவிப்பு

நாகப்பட்டினம்: கரோனா அச்சம் காரணமாக உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழா வருகிற 29ஆம் தேதி பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் என பேராலய அதிபர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

வேளாங்கண்ணி
வேளாங்கண்ணி

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா தொடர்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய பேராலய அதிபர் பிரபாகரன், ”இந்த ஆண்டு கரோனா நோய் பரவல் காரணமாக அரசிற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் பக்தர்கள் இல்லாமல் திருவிழா 29ஆம் தேதி நடைபெறும். இது மனவருத்தத்தை ஏற்படுத்தினாலும், அரசு ஆணையை ஏற்று இந்த ஆண்டு பொதுமக்கள் பங்களிப்பு இல்லாமல், அருட்தந்தையர்களை கொண்டு திருவிழா நடைபெறும்.

மக்களின் நலனை கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் திருவிழாவை வீட்டில் இருந்தபடியே கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. வரும் 29ஆம் தேதி திருக்கொடி பவனியை தொடர்ந்து, தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கொடியேற்றுவார். ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு தமிழ், கொங்கணி, மலையாளம், ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திருப்பலி நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வழிபாட்டு சடங்குகள் வழக்கம்போல நடைபெறும்.

பாத யாத்திரை வருவதை வழக்கமாக கொண்டுள்ள பக்தர்கள் அரசின் நடைமுறையை பின்பற்றி ஆலயம் வருவதைத் தவிர்க்க வேண்டும். பேராலய இணையதளம் பக்கம் மூலம் தினசரி நிகழ்வுகளை மக்கள் கண்டுகளிக்கலாம். செப்டம்பர் 8ஆம் தேதி கூட்டுப்பாடல் திருப்பலியை தொடர்ந்து, கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவுபெறும்.

பேராலய அதிபர் பிரபாகர் செய்தியாளர் சந்திப்பு

செய்தியாளர் சந்திப்பின்போது பேராலய பங்குத் தந்தைகள் சூசை மாணிக்கம், யாகப்பா ராஜரத்தினம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்களால் நிரம்பி வழியும் வேளாங்கண்ணி திருவிழா, இந்த ஆண்டு மக்கள் கூட்டமின்றி நடைபெற இருப்பது இதுவே முதல்முறை.

ABOUT THE AUTHOR

...view details