மயிலாடுதுறை:சீர்காழியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு ஆளுநரின் கார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவது திசை திருப்பும் முயற்சியாக உள்ளது.
பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்கள் திட்டமிட்டு ஒரு பதற்றத்தை ஏற்படுத்த உருவாக்கப் பார்க்கிறார்கள். பாஜகவினர் வன்முறையைத் தூண்டுவதற்கு திட்டமிட்டு செயல்படுகின்றனர். அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படக்கூடிய அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும்; அதன் மூலமாக தமிழ்நாட்டில் வேர் ஊன்ற வேண்டும் எனத் திட்டமிடுகின்றனர்.
ஹெச்.ராஜா ஆளுநர் ஆகிறாரா?பாரதிய ஜனதா ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சியைச் சேர்ந்த அதி தீவிர மதவாத சக்திகளை ஆளுநராக நியமித்து வருகின்றனர். அவர்கள் மூலம் மத வெறுப்பை ஊக்கப்படுத்துவது, மத அடிப்படையிலான பிரிவினையை உறுதிப்படுத்துவதற்கு பாஜக அரசு முயல்கிறது. அதன் அடிப்படையிலேயே ஹெச். ராஜா, கேரள ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் எனத்தகவல் வெளியாகியுள்ளது.