நாகை ரயில் நிலையம் முன்பு உள்ள மறைமலை அடிகளார் வாடகை ஓட்டுநர் உரிமையாளர் நலச்சங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், வாடகை கார், வேன் உள்ளிட்டவற்றை ஓட்டி வருகின்றனர். அதே பகுதியில் சொந்தமாக வாகனம் வைத்துள்ள வாகன ஓட்டுநர்கள் சிலர் கடந்த வாரம் ரயில் நிலையம் முன்பு சட்டத்திற்கு புறம்பாக கொட்டகை அமைத்தனர். இந்நிலையில், கொட்டகையை நீக்குமாறு வாடகை ஓட்டுநர் நலச்சங்கத்தினர் அவர்களிடம் முறையிட்டபோது, கொட்டகையை அமைத்தவர்கள் அலட்சியமான பதிலை அளித்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த வாடகை ஓட்டுநர் நலச்சங்கத்தினர் கொட்டகையை அப்புறப்படுத்தினர். இதையடுத்து சொந்தமாக வாகனங்கள் வைத்திருக்கும் ஓட்டுநர்களில் சிலர், குடி போதையில் நாகையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், காளிதாஸ், மகேந்திரன் ஆகியோரின் நான்கு வாடகை வாகனங்களை கற்கள், இரும்பு ஆயுதங்கள் கொண்டு சரமாரியாக தாக்கி துவம்சம் செய்தனர். இதில், தாக்குதலுக்குள்ளான நான்கு வேன்களின் கண்ணாடிகள் முற்றிலும் உடைந்து பலத்த சேதமடைந்தது.