மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்துக்கு 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக உறுப்பினர்கள் 17 பேர் வெற்றி பெற்றனர். அதிமுக உறுப்பினர்கள் 5 பேரும் பாமக, காங்கிரஸ் கட்சிகள் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றன. இதில், ஒன்றியக்குழுத் தலைவருக்கான போட்டியில் திமுக சார்பில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் எம்.மூர்த்தியின் மனைவி காமாட்சி, திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் இளைபெருமாளின் மனைவி ஸ்ரீமதி ஆகியோர் போட்டியிட்டு அதிமுக ஆதரவுடன் 14 வாக்குகள் பெற்று காமாட்சி மூர்த்தி வெற்றி பெற்று ஒன்றியக்குழுத் தலைவர் ஆனார். தொடர்ந்து நடைபெற்ற ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மகேஸ்வரி முருகவேல் திமுக ஆதரவுடன் 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதனால் திமுகவில் ஒன்றிய செயலாளர்களிடையே உள்கட்சி பூசல் ஏற்பட்டது. தொடர்ந்து, சில மாதங்களில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் எம்.மூர்த்தியின் பொறுப்பு பறிக்கப்பட்டு, அப்பொறுப்பில் இமயநாதன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் இயமநாதனின் ஆதரவு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அதிமுக துணைத் தலைவர் மகேஸ்வரி முருகவேலை பதவியில் இருந்து அகற்ற தெற்கு ஒன்றிய செயலாளர் மூவலூர் மூர்த்தி ஆதரவாளர்களிடம் கையொப்பத்துடன் கடிதம் கேட்டதால் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.