நாகை மாவட்டம் ஆண்டோ சிட்டி பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வரும் தன்ராஜ், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கான மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் திருவாரூரில் செயல்பட்டு வரும் தனியார் அரிசி ஆலையின் செயல்பாட்டிற்கு காற்று மற்றும் நீர் உரிமத்தை புதுப்பிக்க ஆலை உரிமையாளரிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து ஆலையின் உரிமையாளர் திருவாரூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் தன்ராஜ் லஞ்சம் வாங்கியபோது தன்ராஜை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் அவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து தன்ராஜ் தங்கியுள்ள வாடகை வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ரமேஷ் குமார் தலைமையிலான அலுவலர்கள் சோதனை நடத்தினர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் அந்தச் சோதனையில் 3 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விடிய விடிய மேற்கொண்ட சோதனையில் செங்கல்பட்டு மாவட்டம், ஊரபாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் 57 லட்சத்து 2 ஆயிரம் ரூபாயும் மற்றும் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் இரண்டு லட்சத்து 66 ஆயிரத்து 500 ரூபாயினையும் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதையுடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு கணக்கில் வராத இந்தப் பணம் குறித்து விசாரணை மேற்கொண்டு கொண்டுவருகின்றனர்.