மயிலாடுதுறை:வாழூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனம் (80). இவர், கணவர் மற்றும் மகனை இழந்த நிலையில் மருமகளுடன் வசித்து வருகிறார். குடும்பத்தினரிடம் ஏற்பட்ட பிரச்சனையில் மன வருத்தத்தில் 30 கிலோமீட்டர் தூரம் உள்ள மயிலாடுதுறைக்கு நடந்தே வந்து சேர்ந்துள்ளார். சாலையில் செல்வோர் வாங்கித் தரும் உணவை அருந்திவிட்டு சாலையிலேயே படுத்து உறங்கி வந்தார்.
இவரது நிலைமையை கண்ட மயிலாடுதுறை சமூக சேவகர்கள், இவரிடம் விசாரித்து பெரம்பூரைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் நிர்வாகி பாரதி மோகன் என்பவருக்கு புகைப்படத்தை செல்போனில் அனுப்பி உள்ளனர். இவரது சொந்த கிராமத்திற்கு சென்று விசாரித்த போது கடந்த மாதம் முதல் பேரனை பார்க்கச் செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்று விட்டதாகவும் அது முதல் பல்வேறு இடங்களில் தாங்கள் தேடி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.