விழுப்புரம் முதல் நாகை மாவட்டம், வேளாங்கண்ணி வரையிலான என்எச் 45 ஏ சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் தரங்கம்பாடி முதல் சீர்காழி வரை கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு சதுர அடி ஒன்றுக்கு ரூ.6 மட்டும் வழங்கப்படுகிறது. மிகக் குறைந்த விலை வழங்கப்படுவதை ஏற்காத நில உரிமையாளர்கள் கூடுதல் விலை வழங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அரசு உரிய விலை நிர்ணயம் செய்யவில்லை.
நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற உள்ள இடத்தில் டிராபிக் ராமசாமி ஆய்வு இதனையடுத்து குறைந்த விலைக்கு நிலத்தை கையகப்படுத்தும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக 20 கிராமங்களைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் நான்கு வழிச்சாலைக்கு குறைந்த விலையில் நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதிக்கு வந்த மக்கள் பாதுகாப்பு கழக நிறுவன தலைவரும், சமூக சேவகருமான டிராபிக் ராமசாமி செம்பதனிருப்பு, தலைச்சங்காடு, அன்னப்பன்பேட்டை ஆகிய கிராமங்களுக்கு சென்று நிலம் கையகப்படுத்தப்பட்ட இடங்களை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, தற்போது இருக்கின்ற இரண்டு வழிச்சாலையை பாதுகாக்க தெரியாத மாநில அரசுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். நிலத்தை வழங்காமல் நான்கு வழிச்சாலை வேண்டாம் என புகார் மனு அளித்தால், நீதிமன்றத்தின் மூலம் தொடர் சட்டப் போராட்டம் நடத்தி போராட்டத்திற்கு வெற்றி பெற்றுத் தருவேன் எனக் கூறினார்.