மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் எட்டாம் ஆண்டு நெல் திருவிழா நடைபெற்றது. இதனையடுத்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன், சிறந்த முறையில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கினார்.
பின்னர் சித்தர் மரபு வழி உணவு வகைகள் குறித்து ஞானப்பிரகாசமும்; தமிழர் வேளாண்மை குறித்தும் தற்சார்பு பற்றியும் பாலகிருஷ்ணனும் பேசினர்.
மரபு நெல் ரகங்களைப் பயிரிடும் விவசாயிகளுக்காக சம்பா பட்டத்திற்குத் தேவையான பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சீரகச்சம்பா, கிச்சலி சம்பா, காட்டுயானம் போன்ற 10 விதமான நெல் ரகங்கள் 50 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
தொடர்ந்து, இந்தியாவில் உள்ள 500க்கும் மேற்பட்ட மரபு நெல் ரகங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. நஞ்சில்லா உணவு, பலாப்பழ அல்வா, பலாப்பழ ஐஸ் கிரீம், துணிப்பை, சித்த மருத்துவம், அரிய வகை மூலிகை, பாரம்பரிய தானிய தின்பண்டங்கள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்படுகின்றன.
மேலும் இயற்கை விவசாயத்திற்குத்தேவையான அனைத்து ஆலோசனை வழிமுறைகளையும் விவசாயிகளுக்கு வழங்கினர். நாட்டு காய்கறி விதைகளின் விற்பனையும் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்றவர்களுக்குப் பாரம்பரிய அரிசியில் செய்யப்பட்ட உணவுகளும் வழங்கப்பட்டன.
சீர்காழியில் களைகட்டிய நெல் திருவிழா இதையும் படிங்க:புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு.. ஏகனாபுரம் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றம்